பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: முதல் சுற்றில் பிரான்ஸ் வீரரை சந்திக்கிறார் சுமித் நாகல்
பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி முதல் சுற்றில் இந்த வீரர் சுமித் நாகல் பிரான்ஸ் வீரருடன் மோத உள்ளார்.
பாரீஸ்,
பாரீஸ் ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டி நாளை தொடங்குகிறது. இதில் யார்-யாருவது மோதுவது என்ற போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச் (செர்பியா) முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டெனை சந்திக்கிறார். சமீபத்தில் விம்பிள்டன் பட்டம் வென்ற கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) ஹேடி ஹபிப்புடனும் (லெபனான்), ரபெல் நடால் (ஸ்பெயின்), புசோவிக்சுடனும் (ஹங்கேரி) மோதுகின்றனர்.
இதில் முன்னாள் நம்பர் ஒன் நட்சத்திரங்களான ஜோகோவிச், நடால் தங்களின் முதல் தடையை தாண்டினால் அடுத்த சுற்றில் நேருக்கு நேர் மோத வேண்டி வரும். உலக தரவரிசையில் 80-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் சுமித் நாகல், தனது முதல் சுற்றில் 68-ம் நிலை வீரரான கோரென்டின் மவுடெட்வுடன் (பிரான்ஸ்) மல்லுகட்டுகிறார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஸ்ரீராம் பாலாஜி இணை முதல் ஆட்டத்தில் பிரான்சின் பேபியன் ரிபோல்- ரோஜர் வாசெலின் இணையை எதிர்த்து ஆட உள்ளது.