2027-ம் ஆண்டு உலகக் கோப்பை கோலி, ரோகித் சர்மாவுக்கு உரியது - சுனில் கவாஸ்கர்

கோப்புப்படம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராட் கோலி டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராட் கோலி டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வரும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் டக்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இவ்வாறு விளையாடினால் அவரால் எப்படி 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் ஆட முடியும் என்ற விவாதம் கிளம்பி இருக்கிறது.
இந்த நிலையில் கோலியின் பேட்டிங் குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள் குவித்து இருக்கிறார். 51 சதங்கள் அடித்துள்ளார். அத்துடன் டெஸ்டிலும் 30 சதங்கள் விளாசியுள்ளார். ஆயிரக்கணக்கில் ரன்கள் எடுத்துள்ள அவர் இது போன்று சில ஆட்டங்களில் சோபிக்காமல் போவது சகஜம் தான்.
அது குறித்து பெரிய அளவில் ஆராய தேவையில்லை. அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் வாழ்க்கை எஞ்சியிருக்கிறது. அனேகமாக சிட்னியில் நடக்கும் கடைசி ஒரு நாள் போட்டியில் அவரிடம் பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம். ஆஸ்திரேலியாவில் அவருக்கு அடிலெய்டு மைதானம் மிகவும் பிடித்தமானது. இங்கு அவர் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கணிசமான சதங்கள் அடித்துள்ளார். இதனால்தான் அடிலெய்டு ஒரு நாள் போட்டியின் போது அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் நினைத்தது போல் நடக்கவில்லை.
கோலி களம் இறங்கிய போது அவருக்கு கிடைத்த ஆரவாரமான வரவேற்பு அற்புதமானது. அவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் எழுந்து நின்று கைதட்டினர். கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்களிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது. இந்த ஆட்டத்தில் கோலி அவுட் ஆகி பெவிலியன் திரும்பும் போது கையசைத்ததை அவரது ஓய்வுக்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியாது.
வீரர்கள் செல்லும் வழியில் உறுப்பினர்களுக்கான கேலரி உள்ளது. இங்கு முன்னாள் வீரர்கள், நிர்வாகிகள் இருந்தனர். அவர்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டு தான் கோலி கையசைத்தார் என்று நினைக்கிறேன். அவர் எதையும் எளிதில் விட்டுக்கொடுக்கும் வீரர் கிடையாது. அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் டக்-அவுட் ஆனதால் அவர் ஓய்வு பெறுவார் என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. நல்ல நிலையில் ஓய்வு பெற வேண்டும் என்பதே அவரது இலக்கு.
அவர் ரன் எடுக்காததால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் கூட ஏமாற்றம் அடைந்திருப்பார்கள். அடுத்து சிட்னி ஆட்டம் இருக்கிறது. இதைத் தொடர்ந்து சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர், இன்னும் நிறைய ஒருநாள் போட்டிகள் மீதமுள்ளன. என்னை கேட்டால் 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை கோலி, ரோகித் சர்மாவுக்கு உரியது என்று சொல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.






