2-வது டி20: பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்திய யு.ஏ.இ


2-வது டி20: பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்திய யு.ஏ.இ
x

image courtesy:twitter/@ICC

தினத்தந்தி 20 May 2025 9:20 AM IST (Updated: 22 May 2025 2:39 PM IST)
t-max-icont-min-icon

யு.ஏ.இ. தரப்பில் அதிகபட்சமாக முகமது வாசீம் 82 ரன்கள் குவித்தார்.

ஷார்ஜா,

வங்காளதேச கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் (யு.ஏ.இ.) சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற யு.ஏ.இ. பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தன்சித் ஹசன் 59 ரன்களும், லிட்டன் தாஸ் 40 ரன்களும் அடித்தனர். யு.ஏ.இ. தரப்பில் ஜவதுல்லா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய யு.ஏ.இ. அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் ஆன முகமது வாசீம் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

யு.ஏ.இ. அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன் தேவைப்பட்டது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அந்த ஓவரை வீசிய தன்சிம் ஹசன் 2 நோபால், ஒரு வைடு மற்றும் ஒரு சிக்சர் விட்டுக்கொடுத்து சொதப்பினார். இதனால் யு.ஏ.இ. அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்து திரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக முகமது வாசீம் 82 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (21-ம் தேதி) நடைபெற உள்ளது.

1 More update

Next Story