2-வது டெஸ்ட்: இங்கிலாந்தின் பேஸ்பாலுக்கு பயந்து தாமதமாக டிக்ளேர் செய்தோமா..? இந்திய அணியின் பயிற்சியாளர் விளக்கம்

image courtesy:BCCI
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற 608 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பர்மிங்காம்,
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் கேப்டன் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தின் (269 ரன்) உதவியுடன் இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஜேமி சுமித் (184 ரன்), ஹாரி புரூக் (158 ரன்) சதம் அடித்தனர்.
பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரவீந்திர ஜடேஜா 69 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சுப்மன் கில் 161 ரன்னில் அவுட்டானார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது.
இதைத்தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 72 ரன்கள் அடித்திருந்தது. ஆலி போப் 24 ரன்னுடனும், ஹாரி புரூக் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 5-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
முன்னதாக இந்த போட்டியில் இந்திய அணி 500 ரன்களை கடந்ததும் டிக்ளேர் செய்யும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்தியா 608 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதனால் இங்கிலாந்தின் அதிரடி பேட்டிங் அணுகுமுறையான பேஸ்பாலுக்கு பயந்து இந்திய அணி தாமதமாக டிக்ளேர் செய்ததாக ஒரு கருத்து எழுந்துள்ளது. இதனிடையே இங்கிலாந்து வீரரான ஹாரி புரூக்கும் இந்தியா எவ்வளவு இலக்கு நிர்ணயித்தாலும் சேசிங் செய்வோம் என்று சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்தியா தாமதமாக டிக்ளேர் செய்தது ஏன்? என்பது குறித்து பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், "பேஸ்பால் குறித்து எங்களுக்கு கவலையா? இல்லை, உண்மையில் இல்லை. ஒரு போட்டியின் கடைசி நாளில் ஒரு அணி 500+ ரன்கள் எடுத்தால், அவர்கள் வெற்றி பெற தகுதியானவர்கள் என்று நினைக்கிறேன். எனவே, நாங்கள் கொஞ்சம் அதிக நேரமும் ரன்களையும் எடுக்க விரும்பினோம். டிக்ளேர் செய்வது குறித்து நாங்கள் நிறைய பேசினோம். பிட்ச் நன்றாக இருந்ததால் எங்கள் வீரர்கள் வசதியாக பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு ஓவருக்கு 4-5 ரன்கள் எடுத்துக்கொண்டு பேட்டிங் செய்து கொண்டிருந்தார்கள்.
வானிலையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. எனவே 4-வது நாளில் 20 - 25 ஓவர்களை இங்கிலாந்துக்கு வழங்கி சில விக்கெட்டுகள் எடுத்தாலே அது எங்களுக்கு போனஸ் என்று நினைத்தோம். கடைசி நாள் முழுமையாக இருப்பதால் இங்கிலாந்துக்கு 4-வது நாளில் ஒரு மணி நேரம் கொடுத்தால் போதும் என்று நினைத்தோம். எந்த இலக்கை கொடுத்தாலும் நாங்கள் சேசிங் செய்வோம் என்று ஹாரி புரூக் சொன்னார். எனவே கடைசி நாள் சுவாரசியமாக இருக்கும். அந்த பாணியிலான (பேஸ்பால்) கிரிக்கெட்டை விளையாடி இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. எனவே அவர்கள் வெற்றி பெற்றால் அப்படியே ஆகட்டும்" என்று கூறினார்.