2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 278 ரன்னில் ஆல்-அவுட்

image courtesy:twitter/@BLACKCAPS
வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 205 ரன்கள் அடித்தது.
வெலிங்டன்,
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி வெலிங்டனில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 205 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து தொடக்க நாளில் விக்கெட் இழப்பின்றி 24 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. டிவான் கான்வே (60 ரன்), அறிமுக வீரரான விக்கெட் கீப்பர் மிட்செல் ஹே (61 ரன்) அரைசதம் அடித்தனர். முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் 37 ரன்னிலும், கேப்டன் டாதம் லாதம் 11 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 74.4 ஓவர்களில் 278 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளரான பிளேர் டிக்னெர், முதல் நாளில் பீல்டிங்கின் போது இடது தோள்பட்டையில் காயமடைந்ததால் பேட்டிங் செய்ய வரவில்லை. தோள்பட்டையில் கட்டுப்போட்டுள்ள அவர் எஞ்சிய போட்டியில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் 73 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் களம் கண்ட வெஸ்ட் இண்டீஸ் 2ம் நாள் முடிவில் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்துள்ளது. பிரன்டன் கிங் 15 ரன்களுடனும், கவெம் ஹோட்ஜ் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் இன்னும் 41 ரன்கள் பின்தங்கி உள்ளது.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.






