3-வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற இங்கிலாந்து


3-வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற இங்கிலாந்து
x

ஜோப்ரா ஆர்ச்சர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சவுத்தம்டான்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நடைபெற்ற முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தம்டானில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 414 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 110 ரன்களும், ஜோ ரூட் 100 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஷ் மற்றும் கேஷவ் மகராஜ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20.5 ஓவர்களில் 72 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி 342 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்க அணியில் கார்பின் பாஷ் (20 ரன்), கேஷவ் மகராஜ் (17 ரன்), ஸ்டப்ஸ் (10 ரன்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. கேப்டன் பவுமா காயத்தால் பேட்டிங் செய்ய களம் இறங்கவில்லை. இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட்டும், அடில் ரஷித் 3 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஜோப்ரா ஆர்ச்சர் ஆட்டநாயகன் விருதையும், தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ், இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் ஆகியோர் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே தொடரை இழந்து விட்ட இங்கிலாந்துக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

1 More update

Next Story