4-வது டெஸ்ட்: குல்தீப் யாதவுக்காக அவரை நீக்க கூடாது - இங்கிலாந்து முன்னாள் வீரர் எச்சரிக்கை

image courtesy:BCCI
இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது.
மான்செஸ்டர்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நாளை தொடங்குகிறது.
தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அணி களமிறங்க உள்ளது. ஏற்கனவே நிறைய வீரர்கள் காயத்தில் சிக்கியுள்ளதால இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் என்ற பேச்சுக்கள் அதிகம் காணப்படுகின்றன.
இந்நிலையில் 4-வது போட்டியில் குல்தீப் யாதவுக்காக வாஷிங்டன் சுந்தரை இந்திய அணி கழற்றி விடக்கூடாது என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ஹார்மிஷன் எச்சரித்துள்ளார்.
இதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அவர்கள் (இந்திய அணி) ஜடேஜா, சுந்தரை நீக்க முடியாது. அதற்கான மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட வைக்க முடியுமா? அது ஒரு பெரிய கேள்வி. குல்தீப்பை விளையாட வைப்பது சரியாக இருக்கும் என்று நான் நினைத்தாலும், அவரை எப்படி விளையாட வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. முதல் போட்டியில் ஒரு பேட்ஸ்மேனை நீக்கியது போன்ற முடிவை எடுக்கலாம். ஒருவேளை வாஷிங்டன் சுந்தரை கழற்றி விடுவது மிகப்பெரிய முடிவாக இருக்கும். அது ஒரு பெரிய சவாலாக இருக்கும்.
ஏனெனில் மான்செஸ்டர் மைதானத்தில் குல்தீப்புக்கு பவுன்ஸ் இருக்காது. ஆனால் போட்டி நடைபெற நடைபெற பிட்ச் சுழலுக்கு சாதகமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளும் கடைசி நாள் வரை சென்றது. அதை இந்தியா மிகவும் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் இந்திய அணி சமநிலையில் இருப்பதாக நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.






