இண்டர்நேஷனல் லீக் போட்டி ஏலத்தில் பங்கேற்கும் அஸ்வின்

போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
புதுடெல்லி,
அடுத்த சீசனுக்கான இண்டர்நேஷனல் லீக் (ஐ.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் டிசம்பர் 2-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு (ஜனவரி) 4-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 30-ந் தேதி துபாயில் நடக்கிறது.
இந்த ஏலத்தில் கலந்துகொள்ள வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்ய வருகிற 10-ந் தேதி கடைசி நாளாகும். ஐ.பி.எல். பாணியில் 6 அணிகள் இடையே நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்க, ஐ.பி.எல். போட்டியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற தமிழகத்தை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஆர்.அஸ்வின் முடிவு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்ய போட்டி அமைப்பாளர்களுடன் அஸ்வின் பேசியதாக தகவல் வெளியானது. இது குறித்து அஸ்வினிடம் கேட்ட போது, ‘ஆம், நான் போட்டி அமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். ஏலத்தில் பதிவு செய்தால் என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.






