ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவின் வெற்றிப்பயணம் தொடருமா? இலங்கையுடன் இன்று மோதல்


ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவின் வெற்றிப்பயணம் தொடருமா? இலங்கையுடன் இன்று மோதல்
x

image courtesy: BCCI twitter

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் சூப்பர்4 சுற்றில் இந்திய அணி, இலங்கையுடன் மோதுகிறது.

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 6-வது மற்றும் கடைசி லீக்கில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் மல்லுக்கட்டுகிறது. இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இலங்கை வாய்ப்பை இழந்து விட்டது. அதனால் இது சம்பிரதாய மோதலாகவே இருக்கும்.

நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா, லீக் சுற்றில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தை பிடித்தது. அதைத் தொடர்ந்து சூப்பர்4 சுற்றில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், வங்காளதேசத்தை 41 ரன் வித்தியாசத்திலும் போட்டுத்தாக்கி இறுதி சுற்றை உறுதி செய்தது.

இந்திய அணியில் பேட்டிங்கில் தொடக்க ஜோடியான அபிஷேக் ஷர்மாவும், சுப்மன் கில்லும் மிரட்டுகிறார்கள். குறிப்பாக அபிஷேக் ஷர்மா இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 2 அரைசதம், 17 சிக்சர் உள்பட 248 ரன்கள் எடுத்துள்ளார். பந்து வீச்சில் குல்தீப் யாதவ் (12 விக்கெட்), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி கைகொடுக்கிறார்கள். ஆனால் பீல்டிங் தான் சொதப்புகிறது. இதுவரை 12 கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டுள்ளனர். அதுவும் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் சைப் ஹசனுக்கு மட்டும் 4 கேட்ச்சுகளை வீணடித்தனர். எனவே பீல்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும். அப்போது தான் சறுக்கலின்றி வீறுநடையை தொடர முடியும். இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டியை எட்டி விட்டதால் அணியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என தெரிகிறது.

இலங்கை அணி சூப்பர்4 சுற்றில் வங்காளதேசத்திடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவியது. பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் வெறும் 133 ரன்களில் அடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறியது பின்னடைவாகிப் போனது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஹசரங்கா, தீக்‌ஷனா கட்டுக்கோப்புடன் பந்து வீசியும் பலன் இல்லை. இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற மனநிலையுடன் ஆக்ரோஷமாக விளையாடி போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்ய முயற்சிப்பார்கள். அதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 22-ல் இந்தியாவும், 9-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை. போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி அல்லது வாஷிங்டன் சுந்தர், பும்ரா அல்லது அர்ஷ்தீப்சிங்.

இலங்கை: பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, சாரித் அசலங்கா (கேப்டன்), கமிந்து மென்டிஸ், தசுன் ஷனகா, ஹசரங்கா, சமிகா கருணாரத்னே அல்லது துனித் வெல்லாலகே, தீக்‌ஷனா, நுவான் துஷாரா, துஷ்மந்தா சமீரா.

இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ்1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

1 More update

Next Story