ஆசிய கோப்பை: பாபர் அசாம் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? பாக்.பயிற்சியாளர் விளக்கம்

image courtesy:PTI
ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
கராச்சி,
நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை வங்காளதேசம் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது.
இந்த தொடருக்கு முன்னர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெற உள்ளது. வருகிற 29-ந்தேதி முதல் செப்.7-ந்தேதி வரை சார்ஜாவில் நடக்கும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் இவ்விரு தொடர்களுக்கான (ஆசிய கோப்பை & முத்தரப்பு டி20 தொடர்) பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சல்மான் அலி ஆகா தலைமையிலான அந்த அணியில் முன்னணி வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் தேர்வு செய்யப்படவில்லை. இது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இருவரும் டி20 போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெறவில்லை. இருப்பினும் ஆசிய கோப்பை தொடரின் மூலம் மீண்டும் டி20 அணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மறுபடியும் அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. குறிப்பாக நட்சத்திர வீரரான பாபர் அசாமின் நீக்கம் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ஆசிய கோப்பையில் பாபர் அசாம் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளரான மை ஹெசன் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “பாபர் அசாம் தனது பேட்டிங்கில் சில பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு எதிராக வேகமாக ரன் எடுக்க வேண்டும். அதை சரி செய்வதற்காக தற்போது கடினமாக உழைத்து வருகிறார். அவர் அடுத்து ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் தொடரில் விளையாட உள்ளார். டி20 கிரிக்கெட்டில் முன்னேற்றம் காண்பதற்கு அந்த தொடர் நல்ல வாய்ப்பாக இருக்கும். பாபர் அசாமை பொறுத்தவரை தனது ஆட்டத்திறனை மேம்படுத்துவதன் மூலம் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது” என்று கூறினார்.
ஆசிய கோப்பை மற்றும் முத்தரப்பு டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்:-
சைம் அயூப், சஹிப்ஜதா பர்ஹான், பஹர் ஜமான், முகமது ஹாரிஸ், சல்மான் அலி ஆஹா (கேப்டன்), ஹசன் நவாஸ், ஹூசைன் தலாத், பகீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது வாசிம், சல்மான் மிர்சா, ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், ஹசன் அலி, சுபியான் முகீம், அப்ரார் அகமது.






