ஆஸி. பந்துவீச்சு விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு சவாலாக இருக்கும்... ஆனால்... - வாட்சன்


ஆஸி. பந்துவீச்சு விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு சவாலாக இருக்கும்... ஆனால்... - வாட்சன்
x

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடர் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன.

அதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 19-ந்தேதி பெர்த்தில் நடக்கிறது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா களமிறங்க உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட இருவரும் ஏறக்குறைய 7 மாதம் கழித்து மீண்டும் சர்வதேச களத்திற்கு திரும்பி இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த தொடர் குறித்தும், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் பார்ம் குறித்தும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் சில கருத்துகள கூறியுள்ளார்.

அந்த வகையில் வாட்சன் கூறியதாவது, “ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமாக இது இருக்கலாம். எனவே ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவர்களை தங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை காட்டுவதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள் என நினைக்கிறேன். பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவுக்கு கடுமையான போட்டியாளர்களில் ஒருவராக விராட் கோலி விளங்குகிறார். எங்களுக்கு எதிராக எப்போதும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியை கண்டு ஒரு போதும் பின்வாங்கியதில்லை. அதனால்தான் ஆஸ்திரேலிய ரசிகர்கள் விராட் கோலியை புகழ்கிறார்கள். இது ரோகித் சர்மாவுக்கு பொருந்தும். ஒரு கேப்டனாகவும், வீரராகவும் அற்புதமாக செயல்பட்டு இருக்கிறார். ஆஸ்திரேலிய ரசிகர்கள் தரமான வீரர்களை பாராட்டக்கூடியவர்கள். அதற்கு இது சரியான எடுத்துக்காட்டாக இருக்கும்.

ரோகித், கோலி ஆகியோர் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் டாப்-5 இடத்தில் உள்ளனர். ஆனால் தற்போது அவர்கள் ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடுவதால், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் களம் திரும்புவது எளிதாக இருக்கப் போவதில்லை. குறிப்பாக உலகின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர்களை கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்வது மிகவும் சவாலாக இருக்கும்.

அவர்கள் தங்களது ஆட்டத்திறனை மீண்டும் கண்டறிய சிறிது நேரம் பிடிக்கலாம். ஆனால் அவர்களின் தரம் மற்றும் நிலைத்தன்மையை பார்க்கும்போது, மீண்டும் பார்முக்கு திரும்புவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என நினைக்கிறேன்” என்று கூறினார்.

1 More update

Next Story