ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு: கிரிக்கெட் வீரர் தோனியிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வக்கீல் ஆணையர்

கோப்புப்படம்
கிரிக்கெட் வீரர் தோனியிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வக்கீல் ஆணையரை நியமிக்க ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
சென்னை,
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்ததா? என்பது குறித்து தனியார் டி.வி. நடத்திய விவாத நிகழ்ச்சியில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் என்பவர் கலந்துக் கொண்டு பேசினார். அப்போது, சூதாட்டத்தில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், தனியார் டி.வி. நிறுவனம் உள்ளிட்டோரிடம் இருந்து ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தோனி 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தோனி தரப்பில் ஆஜரான வக்கீல், “இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது. எனவே சாட்சி விசாரணையை தொடங்க வேண்டும். இதற்காக தோனி வாக்குமூலம் அளிக்க ஐகோர்ட்டுக்கு வந்தால், தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். அதனால், வக்கீல் ஆணையர் அமைத்து, வாக்குமூலத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.'' என்று கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் தோனியின் வாக்கு மூலத்தை பதிவு செய்ய ஏதுவாக விரைவில் வக்கீல் ஆணையர் ஒருவர் நியமிக்கப்படுவார். தோனியின் வாக்குமூலம் பதிவு செய்தபிறகு இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று கூறினார்.






