சாம்பியன்ஸ் டிராபி: ஷமி இல்லை.. பும்ரா இடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியும் - ஆஸி.முன்னாள் கேப்டன்

image courtesy: PTI
காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா பங்கேற்கவில்லை.
சிட்னி,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. இந்த நிலையில் தொடரின் 2-வது லீக்கில் முன்னாள் சாம்பியனான இந்தியா, வங்காளதேசத்தை (ஏ பிரிவு) துபாயில் இன்று (வியாழக்கிழமை) எதிர்கொள்கிறது.
முன்னதாக இந்த தொடரிலிருந்து நட்சத்திர பவுலரான பும்ரா காயம் காரணமாக விலகியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனெனில் தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவர் நல்ல பார்மில் இருக்கிறார். டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு அவர் தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றியதை மறக்க முடியாது. அப்படிப்பட்ட அவர் விலகியுள்ளதால் சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்று பல தரப்பினர் கூறி வருகின்றனர்.
அது போன்ற சூழ்நிலையில் ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் வெற்றிக்கு பங்காற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதில் ஷமியுடன் 2-வது வேகப்பந்து வீச்சாளராக ராணா அல்லது அர்ஷ்தீப் ஆகியோரில் யார் களமிறங்குவார்? என்ற கேள்வி நிலவுகிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் பும்ராவின் இடத்தை அர்ஷ்தீப் சிங்கால் மட்டுமே நிரப்ப முடியும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நான் பும்ராவுக்கு பதிலாக இடது கை பவுலரான அர்ஷ்தீப்புடன் விளையாட செல்வேன். டி20 கிரிக்கெட்டில் அவர் எந்தளவுக்கு நன்றாக செயல்படக் கூடியவர் என்பதை நாம் அறிவோம். புதிய பந்திலும் டெத் ஓவர்களிலும் பும்ரா வெளிப்படுத்தக்கூடிய அதே திறனை அவரும் கொண்டிருக்கிறார். அதைத்தான் இந்தியா மிஸ் செய்கிறது. இதனை ராணாவிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. நிறைய திறமையைக் கொண்டுள்ள அவரால் புதிய பந்தில் என்ன செய்ய முடியும் என்பது நமக்குத் தெரியும்.
ஆனால் டெத் ஓவர்களில் அர்ஷ்தீப் போல அவரால் அசத்த முடியாது. இடது கை வீரரான அர்ஷ்தீப் புதிய பந்தை நகர்த்தக் கூடியவர். இது போன்ற ஐ.சி.சி. தொடரில் எதிரணியின் டாப் ஆர்டரில் வலது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும்போது அவரைப் போன்ற இடது கை பவுலர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். எனவே நான் இந்திய அணியில் இருந்தால் இதையே செய்வேன்" என்று கூறினார்.






