தோனி அடுத்த சீசனில் கண்டிப்பாக விளையாட வேண்டும்.. ஏனெனில்.. - கிளார்க்


தோனி அடுத்த சீசனில் கண்டிப்பாக விளையாட வேண்டும்.. ஏனெனில்.. - கிளார்க்
x

image courtesy:PTI

தோனி ஓய்வு பெற்றால் அது சென்னை அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும் என்று கிளார்க் தெரிவித்துள்ளார்.

சிட்னி,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 3-ம் தேதி நிறைவு பெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது.

இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக நடப்பு சீசனின் தொடக்க கட்டத்தில் சில போட்டிகளில் ஆடிய சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதனால் சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையிலும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

இதனிடையே 43 வயதான தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? இல்லையா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. ஆனால் ஓய்வு குறித்து முடிவெடுப்பதற்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது என்று கடைசி போட்டியின் முடிவில் தோனி கூறினார்.

இந்நிலையில் ரோகித், விராட் போல மகேந்திரசிங் தோனியும் அடுத்த சீசனில் விளையாட வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். ஏனெனில் அவர் இருப்பதாலயே ஐ.பி.எல். தொடருக்கு நிறைய ஸ்பான்சர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அடுத்த வருட ஐ.பி.எல்.-ல் எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் விளையாடுவார்கள் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் சென்னை அணி வெளியூரில் விளையாடும்போது எதிரணிகளைக் காட்டிலும் அவர்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர் இருப்பதாலயே ஐ.பி.எல். தொடருக்கு நிறைய ஸ்பான்சர்கள் உள்ளனர்.

தோனி இருப்பதாலேயே அங்கு நிறைய ரசிகர்களும் வருகிறார்கள். அவர் சென்னை அணியின் ராஜா. அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். மக்கள் தோனியின் தாக்கத்தை உணரவில்லை என்று நான் நினைக்கிறேன். அவர் ஓய்வு பெற முடிவு செய்யும்போது, அது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்" என்று கூறினார்.

1 More update

Next Story