சிஎஸ்கே அணியின் நலனுக்காக தோனி இதை செய்ய வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்

image courtesy:PTI
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
மும்பை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் வழக்கத்திற்கு மாறாக தடுமாற்றமாக செயல்பட்டு வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பரிதாபமாக வெளியேறியது.
முன்னதாக நடப்பு சீசனின் தொடக்க கட்டத்தில் சில போட்டிகளில் ஆடிய சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதனால் சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையிலும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
இதனிடையே தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? இல்லையா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. ஆனால் ஓய்வு குறித்து முடிவெடுப்பதற்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது என்று தோனி கூறினார்.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் நலனுக்காக தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெற வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரரான முரளி கார்த்திக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சில விஷயங்கள் நிற்கக் கூடாது என்று நாம் விரும்புவது போல தோனி விளையாடும் வரை உலகம் பார்க்க விரும்பும். ஆனால் சில நேரங்களில் நீங்கள் விரும்பக்கூடியவர் வரவேற்பில் அதிகம் இருக்கக் கூடாது என்று சொல்ல வேண்டிய நிலை வரும். தோனி அல்லது யாராக இருந்தாலும் ஓய்வு பற்றி சிந்திக்க வேண்டும்.
தற்போது விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இப்போது 36 வயது மட்டுமே நிரம்பியுள்ள உங்களிடம் இன்னும் 2 - 3 வருடம் இருக்கிறது என்று விராட் கோலியிடம் அனைவரும் சொல்கின்றனர்.
ஆனால் தோனியை பொறுத்த வரை அவருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை நாம் கண்டறிவது கடினம். ருதுராஜிடம் கேப்டன்ஷிப் கொடுக்கப்பட்டதால் அடுத்த வருடம் தோனி வந்தாலும் அவருக்கு அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட மாட்டாது. ருதுராஜ் கெய்க்வாட்டிடமிருந்து கேப்டன் பதவியைப் பறித்து தோனியிடம் கொடுப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. எனவே அணியின் நலனுக்காக அவர் ஓய்வு பெறும் முடிவை எடுக்கலாம்" என்று கூறினார்.






