முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்


முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
x

image courtesy:BCCI

தினத்தந்தி 19 Oct 2025 5:30 AM IST (Updated: 19 Oct 2025 5:35 AM IST)
t-max-icont-min-icon

இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது.

கடந்த மார்ச் மாதம் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு இந்திய அணி விளையாடும் முதல் சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும்.

டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 7 மாத இடைவெளிக்கு பிறகு சர்வதேச போட்டிக்கு களம் திரும்புகின்றனர். ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக சுப்மன் கில் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல்முறையாக களம் காணுகிறது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை கேப்டன் கம்மின்ஸ் முதுகுத்தண்டு காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் இந்த தொடரில் ஆடவில்லை. இதனால் மிட்செல் மார்ஷ் கேப்டன் பொறுப்பை கவனிக்கிறார். கம்மின்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாதது இழப்பு என்றாலும் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், லபுஸ்சேன், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் என ஆஸ்திரேலிய அணியில் திறமைக்கு குறைவு கிடையாது.

ஒட்டு மொத்தத்தில் தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

1 More update

Next Story