குஜராத் டைட்டன்ஸ் டூ சிஎஸ்கே..? அஸ்வினிடம் வாஷிங்டன் சுந்தர் சொன்ன தகவல்

குஜராத் அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தரை டிரேடிங் முறையில் சிஎஸ்கே வாங்க உள்ளதாக கூறப்பட்டது.
சென்னை,
அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசன் முடிவடைந்த முதலே அடுத்த சீசனுக்கான பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன.
பல அணி நிர்வாங்கள் தங்களது பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களை மாற்ற பரீசிலித்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கேற்றவாறே பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அத்துடன் டிரேடிங் முறையில் வீரர்களை மாற்றவும் அணி நிர்வாகங்கள் முயற்சித்து வருவதும் தெரிகிறது.
முன்னதாக இந்த சீசனில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இதன் காரணமாக அடுத்த சீசனுக்கு முன் அணியை வலுப்படுத்தும் நோக்கில் சிஎஸ்கே நிர்வாகம் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மினி ஏலத்திற்கு முன் டிரேடிங் முறையில் வீரர்களை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் முயற்சித்து வருகிறது.
அதன்படி தமிழக முன்னணி ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை டிரேடிங் முறையில் வாங்க சிஎஸ்கே நிர்வாகம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியது. கடந்த ஏலத்தில் எடுக்கப்பட்ட ரூ.3.2 கோடிக்கே அவரை சிஎஸ்கேவுக்கு டிரேடிங் செய்ய குஜராத் அணி நிவாகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளானது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்தியா மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “நான் வாஷிங்டன் சுந்தரை அழைத்து அவரிடம் இது குறித்து பேசினேன். அதற்கு வாஷி, ‘அதனை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. குஜராத் அணி நிர்வாகம் எனக்கு எதுவும் தெரிவிக்கவில்லை. நான் குஜராத் அணியுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; என் கிரிக்கெட் இங்கே நிறைய வளர்ந்துள்ளது’ என்று என்னிடம் சொன்னார்” என அஸ்வின் கூறினார்.






