ஹாரிஸ் ரவுப் 2 போட்டிகளில் விளையாட தடை: சூர்யகுமார் யாதவுக்கு அபராதம்

இந்திய அணி, 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
துபாய்,
கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் துபாயில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை பந்தாடி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக லீக் மற்றும் சூப்பர்4 சுற்றிலும் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.
இந்த தொடரின் போது பகைமை உணர்வால் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் இடையே பலவிதங்களில் மோதல் போக்கு ஏற்பட்டது. முதலில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க மறுத்த விவகாரம் சலசலப்பை உருவாக்கியது. பாகிஸ்தானுக்கு எதிரான லீக்கில் வெற்றி பெற்ற பிறகு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ‘ பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். இந்த வெற்றியை இந்திய பாதுகாப்பு படையினருக்கு சமர்ப்பிக்கிறோம்’ என்று கூறினார். அவர் விளையாட்டில் தேவையில்லாமல் அரசியல் பேசுவதாக பாகிஸ்தான் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
பாகிஸ்தான் வேகப்பந்து பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது போல் ரசிகர்களை நோக்கி சைகை காட்டியதும் சர்ச்சையாக வெடித்தது. இதே போல் ஹாரிஸ் ரவுப்பின் விக்கெட்டை கபளீகரம் செய்ததும், பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியது போன்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சைகை காட்டி பதிலடி கொடுத்தார்.
இந்த பிரச்சினை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விசாரணை நடத்தி தண்டனை விவரத்தை நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இதன்படி இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமும், இரு தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டது. பும்ரா ஒரு தகுதி இழப்பு புள்ளியுடன் தப்பினார்.
இருவேறு சம்பவங்களில் நடத்தை விதியை மீறியதாக ஹாரிஸ் ரவுப்-க்கு போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதத்துடன், 4 தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டது. 4 தகுதி இழப்பு புள்ளி என்பது, இரண்டு ஆட்டத்திற்கு தடை விதிக்கப்படுவதற்கு சமமாகும். இதன்படி ஹாரிஸ் ரவுப் நேற்று தொடங்கிய தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆடவில்லை. 6-ந்தேதி நடக்கும் 2-வது ஆட்டத்திலும் அவரால் விளையாட முடியாது.
அரைசதம் அடித்ததும் துப்பாக்கியால் சுடுவது போல் பேட்டை காட்டி கொண்டாடிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சஹிப்சதா பர்ஹானும் நடவடிக்கையில் சிக்கினார். அவர் ஒரு தகுதி இழப்பு புள்ளியை பெற்றார்.






