ஹாரி புரூக் அதிரடி சதம்; நியூசிலாந்துக்கு 224 ரன் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

Image Courtesy: @englandcricket
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 135 ரன் எடுத்தார்.
வெல்லிங்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் (2வது போட்டியில் வெற்றி) இங்கிலாந்து கைப்பற்றியது. முதல் மற்றும் 3வது போட்டி மழையால் ரத்தானது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடந்து வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
தொடர்ந்து இங்கிலாந்தின் தொடக்க வீரர்களாக ஜேமி ஸ்மித் மற்றும் பென் டக்கட் களம் கண்டனர். இதில் டக்கட் 2 ரன்னிலும், ஸ்மித் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் கண்ட ஜோ ரூட் 2 ரன், ஜேக்கப் பெத்தேல் 2 ரன் எடுத்து அவுட் ஆகினர்.
தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ஹாரு புரூக் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் பட்லர் 4 ரன், சாம் கர்ரன் 6 ரன், ஓவர்டன் 46 ரன், பிரைடன் கார்ஸ் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய ஹாரி புரூக் சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 35.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 135 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ஜாக்கரி போல்க்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து ஆட உள்ளது.






