டிராவை நோக்கி நகரும் இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் முதல் டெஸ்ட்

image courtesy:twitter/@BCCI
இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 30 ரன்கள் முன்னிலை பெற்றது.
கேன்டர்பரி,
இந்தியா ஏ- இங்கிலாந்து லயன்ஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது ஆதிகாரபூர்வமற்ற டெஸ்ட் (4 நாள் ஆட்டம்) போட்டி கேன்டர்பரியில் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணியின் கேப்டன் ஜேம்ஸ் ரியூ பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி தனது முதல் இன்னிங்சில் 125.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 557 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் கருண் நாயர் 204 ரன்கள் அடித்தார்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 145.5 ஓவர்களில் 587 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 30 ரன்கள் முன்னிலை பெற்றது. அந்த அணி தரப்பில் டாம் ஹெய்ன்ஸ் (171 ரன்கள்), மவுஸ்லி (113 ரன்கள்), மேக்ஸ் ஹோல்டன் (101 ரன்கள்) ஆகிய 3 வீரர்கள் சதமடித்து அசத்தினர். இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 30 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் - அபிமன்யு ஈஸ்வரன் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் ஜெய்ஸ்வால் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே ஈஸ்வரனும் 68 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இருவரின் விக்கெட்டையும் ரெஹன் அகமது கைப்பற்றினார்.
தற்போது வரை இந்தியா ஏ அணி 30 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் அடித்துள்ளது. துருவ் ஜூரெல் 19 ரன்களுடனும், நிதிஷ் ரெட்டி 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இதுவரை 129 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இது கடைசி நாள் (4-வது நாள்) ஆட்டம் என்பதால் இந்த டெஸ்ட் டிராவில் முடிய அதிக வாய்ப்புள்ளது.






