இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாக். வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்த ஐ.சி.சி..?


இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாக். வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்த ஐ.சி.சி..?
x

ஆசிய கோப்பைக்கான போட்டி நடுவர் பணியில் இருந்து ஆன்டி பைகிராப்ட்டை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.

துபாய்,

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில், ஆட்டம் முடிந்ததும் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கவனத்துக்கு கொண்டு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியாவுக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறி போட்டி நடுவர் (மேட்ச் ரெப்ரி) ஆன்டி பைகிராப்ட்டை ஆசிய போட்டிக்கான நடுவர் குழுவில் இருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி. பொது மேலாளர் வாசிம் கானுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் ஆசிய கிரிக்கெட்டுக்கான போட்டி நடுவர் பணியில் இருந்து ஆன்டி பைகிராப்ட்டை உடனடியாக நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. மேலும் அவரை நீக்காவிட்டால் எஞ்சிய ஆசிய போட்டியில் இருந்து விலகிவிடுவோம் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் போட்டி நடுவர் பைகிராப்ட்டை மாற்ற வேண்டும் என்ற பாகிஸ்தான் வாரியத்தின் கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் வாரியத்தின் கோரிக்கையை ஏற்க போதுமான காரணங்கள் இல்லை என ஐ.சி.சி. கருதுகிறது. மேலும் கைகுலுக்கும் சம்பவத்தில் பைகிராப்ட் குறைந்தபட்ச பங்கை மட்டுமே கொண்டிருந்தார் என்பதும், டாஸில் ஒரு கேப்டன் மற்றொரு கேப்டனுடன் கைகுலுக்க மறுத்தால் ஏற்படும் பொது சங்கடத்தைத் தவிர்க்கவே அவர் இதனை செய்திருக்கலாம் என்றும் ஐ.சி.சி. கருதுகிறது. எனவே இந்த விவகாரத்தில் ஐ.சி.சி., போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட்டுக்கு சாதகமான முடிவை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story