ஐ.பி.எல்.: ராஜஸ்தான் அணியில் இணைந்தது குறித்து மனம் திறந்த ஜடேஜா

ஜடேஜாவை ரூ.14 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியுள்ளது.
image courtesy:twitter/@rajasthanroyals
image courtesy:twitter/@rajasthanroyals
Published on

மும்பை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை வாங்க ராஜஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அவருக்கு பதிலாக முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டது.

சென்னை நிர்வாகமும் அதற்கு ஒப்புக்கொண்ட நிலையில் ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தானுக்கு கொடுத்து விட்டு சஞ்சு சாம்சனை அணி வாங்கியுள்ளது. ரூ.18 கோடிக்கு சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியுள்ளது. ஜடேஜாவை ரூ.14 கோடிக்கும், சாம் கர்ரனை ரூ.2.4 கோடிக்கும் ராஜஸ்தான் வாங்கியுள்ளது.

இதில் ரவீந்திர ஜடேஜா 2012-ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடினார். 2023-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் குஜராத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி தேடித்தந்ததை மறந்து விட முடியாது. கடந்த சீசனில் அவரை ரூ.18 கோடிக்கு சென்னை அணி தக்க வைத்திருந்தது. அப்படிப்பட்ட அவரை சிஎஸ்கே வேறு அணிக்கு மாற்றி உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜடேஜா 2008 மற்றும் 2009 ஐ.பி.எல். சீசன்களில் ஆடியுள்ளார். அத்துடன் முதல் சீசனில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் ராஜஸ்தான் அணியில் மீண்டும் இணைந்துள்ளது குறித்து ரவீந்திர ஜடேஜா மனம் திறந்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், எனது ஐ.பி.எல். பயணம் தொடாங்கிய இடத்திற்கு மீண்டும் திரும்புகிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் எனக்கு முதல் மேடையையும், முதல் வெற்றியின் சுவையையும் கொடுத்தது. இங்கு மீண்டும் வருவது மிகவும் சிறப்பு. இது எனக்கு ஒரு அணி மட்டுமல்ல, இது வீடு. அங்குதான் நான் எனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றேன். மேலும் இந்த குழுவுடன் இன்னும் பலவற்றை வெல்வேன் என்று நம்புகிறேன் என கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com