அந்த இரு ஜாம்பவான்களை வழிநடத்துவது எனக்கு மிகப்பெரிய கவுரவம் - சுப்மன் கில்


அந்த இரு ஜாம்பவான்களை வழிநடத்துவது எனக்கு மிகப்பெரிய கவுரவம் - சுப்மன் கில்
x

image courtesy:PTI

தினத்தந்தி 19 Oct 2025 4:30 AM IST (Updated: 19 Oct 2025 5:36 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா - ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது.

டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 7 மாத இடைவெளிக்கு பிறகு சர்வதேச போட்டிக்கு களம் திரும்புகின்றனர். ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக சுப்மன் கில் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல்முறையாக களம் காணுகிறது.

ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடும் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 2027-ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை போட்டி வரை தொடர்ந்து ஆட முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர்கள் அதுவரை தாக்குப்பிடிப்பது கடினம் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் தங்களது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள். எனவே அவர்கள் இருவரும் இந்த தொடரில் எப்படி செயல்பட போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

இந்நிலையில் கேப்டனாக இருந்தாலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உடனான உறவில் எந்த மாற்றமும் இல்லை என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், “வெளியில் நிறைய பேசப்படுகிறது. ஆனால் ரோகித் சர்மா உடனான எனது உறவில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆடுகளத்தின் தன்மை உள்பட எது குறித்து எப்போது கேட்டாலும் அவர் உதவிகரமாக இருக்கிறார். இதேபோல் விராட் கோலியுடனும் நல்லுறவு உள்ளது. அவர்கள் இருவருமே எனக்கு ஆலோசனை அளிக்க தயங்கியது கிடையாது. அணியை முன்னோக்கி எடுத்து செல்வது குறித்து விராட், ரோகித்திடம் நான் பலமுறை உரையாடி இருக்கிறேன்.

அவர்கள் அணியை முன்னோக்கி கொண்டு செல்ல எந்த மாதிரியான கலாசாரத்தை விரும்பினார்கள் என்பது குறித்து அவர்களிடம் இருந்து கற்றதும், அனுபவங்களும் எங்களுக்கு உதவும். நான் சிறுவயதில் அவர்களுடைய வேட்கை நிறைந்த ஆட்டத்தை பார்த்து அவர்களை போன்று உருவெடுக்க வேண்டும் என்கிற உத்வேகத்தை பெற்றேன்.

இரு ஜாம்பவான்களை வழிநடத்துவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும். நான் கடினமான சூழ்நிலையில் இருக்கும்போது அவர்களிடம் ஆலோசனை பெற தயங்கமாட்டேன். கோலி, ரோகித் சர்மா ஆகியோர் வீரர்களிடம் இருந்து சிறந்த திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் பேசக்கூடியவர்கள். அவர்களை போன்று வீரர்களுடன் தெளிவான தகவலை பரிமாறும் கேப்டனாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

1 More update

Next Story