ஜோ ரூட் அபார சதம்.. வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து


ஜோ ரூட் அபார சதம்.. வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
x

image courtesy:twitter/@ICC

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

கார்டிப்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கார்டிப் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 47.4 ஓவர்களில் 308 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கீசி கார்டி 103 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் 4 விக்கெட்டுகளும், சாகிப் மக்மூத் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 309 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜேமி சுமித் மற்றும் பென் டக்கெட் இருவரும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

இந்த இக்கட்டான சூழலில் இருந்து அணியை ஜோ ரூட் மற்றும் கேப்டன் ஹாரி புரூக் மீட்டெடுத்தனர். ஹாரி புரூக் தனது பங்குக்கு 47 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பட்லர் 8 பந்துகள் சந்தித்த நிலையில் டக் அவுட் ஆகினார்.

ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் ஜோ ரூட் நிலைத்து விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்தினார். சதமடித்த பிறகும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இங்கிலாந்து அணிக்கு தனி ஆளாக வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

48.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 312 ரன்கள் அடித்த இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. ஜோ ரூட் 166 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

1 More update

Next Story