சூர்யகுமார் யாதவை விலங்குடன் ஒப்பிட்டு விமர்சித்த விவகாரம்: பாக்.முன்னாள் வீரரை விளாசிய மதன் லால்

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்த சம்பவம் சர்ச்சையானது.
லாகூர்,
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. முன்னதாக பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல், அதற்கு இந்தியாவின் பதிலடியால் உருவான போர் பதற்றம் தணிந்த பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த முதல் போட்டி என்பதால் கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து இருந்தது.
போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் இந்த ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர். பாகிஸ்தான் வீரர்கள் கை குலுக்குவதற்காக களத்தில் இருந்த நிலையில் இந்திய வீரர்கள் வெளியேறினர். இந்த விவகாரம் சர்ச்சையானது.
இதனை பாகிஸ்தானை சேர்ந்த பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். அதன் உச்சமாக பாகிஸ்தான் முன்னாள் வீரரான முகமது யூசுப் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவை ‘பன்றி’ உடன் ஒப்பிட்டு விமர்சித்தார். அத்துடன் நடுவர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி போட்டியில் வெல்வதற்காக இந்தியா வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் விமர்சித்திருந்தார். இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர்.
இந்நிலையில் முகமது யூசுப்பின் இந்த கருத்து முற்றிலும் முட்டாள்தனமானது என்று இந்திய முன்னாள் வீரரான மதன் லால் விளாசியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “ஓ, பாருங்க, இதுதான் பாகிஸ்தானின் குணம். நீங்கள் எப்படி ஒருவரை திட்டலாம்? இது போன்ற விஷயங்கள் மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும், வேறு எதுவும் தெரியாது. இதைப் பற்றி நான் வேறு எதுவும் சொல்ல முடியாது. ஒருவரை திட்டுவது முற்றிலும் தவறானது. சர்வதேச அளவில் விளையாடிய ஒரு கிரிக்கெட்டர் (யூசுப்) எப்படி இப்படி பேச முடியும்? அது ஒரு முற்றிலுமான முட்டாள்தனம். அப்படி பேசுபவர்கள் படிப்பறிவற்ற மக்களாக இருப்பார்கள்” என்று கூறினார்.






