மந்தனா, ஹர்மன்ப்ரீத் போராட்டம் வீண்.. இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து

image courtesy:ICC
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹீதர் நைட் 109 ரன்கள் குவித்தார்.
இந்தூர்,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் இந்தூரில் இன்று நடைபெற்ற 20-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஹீதர் நைட்டின் அபார சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹீதர் நைட் 109 ரன்கள் குவித்தார். இந்திய தரப்பில் தீப்தி ஷர்மா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனையான பிரதிகா ராவல் 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து வந்த ஹர்லீன் தியோல் 24 ரன்களில் அவுட்டானார். இந்த இக்கட்டான சூழலில் மற்றொரு தொடக்க வீராங்கனையான மந்தனாவுடன், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கை கோர்த்தார்.
இருவரும் சிறப்பாக விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதத்தை கடந்தனர். இவர்களின் போராட்டத்தால் இந்திய அணி வெற்றியை நோக்கி பயணித்தது. ஆனால் இவர்கள் ஆட்டமிழந்ததும் நிலைமை அப்படியே தலைகீழ் ஆனது. மந்தனா 88 ரன்களிலும், கவுர் 70 ரன்களிலும் முக்கியமான தருணத்தில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் தீப்தி சர்மா (50 ரன்கள்) தவிர மற்ற வீராங்கனைகள் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. முடிவில் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்கள் அடித்தது. இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து நடப்பு தொடரில் 3-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து மொத்தம் 9 புள்ளிகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






