கில் இல்லை.. அவர்தான் கேப்டனாக இருக்க தகுதியானவர் - சேவாக் அதிருப்தி


கில் இல்லை.. அவர்தான் கேப்டனாக இருக்க தகுதியானவர் - சேவாக் அதிருப்தி
x

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடி சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் பதவி வழங்காதது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஜஸ்பிரித் பும்ரா முழுமையாக 5 போட்டிகளிலும் விளையாட முடியாத நிலையில் உள்ளதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார். எனவே சுப்மன் கில் வருங்காலத்தில் அசத்துவார் என்ற நம்பிக்கையுடன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் மட்டுமே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகும் தகுதியைக் கொண்டிருப்பதாக முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். ஆனால் அவரை விட்டுவிட்டு கில்லை கேப்டனாக தேர்ந்தெடுத்த தேர்வுக்குழு மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் சேவாக் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"ஒரு தொடருக்கு பும்ரா பரவாயில்லை. ஆனால் ஒருவர் நீண்ட காலமாக கேப்டனாக செயல்பட வேண்டும் என்று நீங்கள் என்னிடம் கேட்டால் பும்ராவை தேர்ந்தெடுக்காதது சரியான முடிவு என்று சொல்வேன். ஏனெனில் வருடத்தில் இந்தியா 10 போட்டிகளில் விளையாடினால் அந்த அனைத்திலும் பும்ராவால் விளையாட முடியாது.

ஆனால் திவாரி சொன்னது போல கில் 2-வது சிறந்த தேர்வு கிடையாது. அவர் 3-வது தேர்வுதான். உண்மையில் ரிஷப் பண்ட்தான் 2வது தேர்வு. ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு செய்ததை தற்போதுள்ள வீரர்களில் யாரும் செய்யவில்லை. விராட் கோலிக்கு பின் ரசிகர்களை டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க வைத்த ஒரு வீரர் என்றால் அது பண்ட். விபத்து காரணமாக காயத்தை சந்தித்த அவர் மீண்டும் விளையாட வந்தபோது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

எனவே அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரை வருங்காலத்தில் கேப்டனாக நியமிக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது. ஆனால் பந்து வீச்சாளர்கள் கேப்டனாக நியமிக்கப்படுவது மிகக்குறைவு. எனது கெரியரில் அனில் கும்ப்ளே மட்டுமே கேப்டனாக இருந்து பார்த்துள்ளேன்" என்று கூறினார்.

1 More update

Next Story