ஒருநாள் கிரிக்கெட்: 20 தொடர் தோல்விகள்... முற்றுப்புள்ளி வைத்த கே.எல்.ராகுல்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
விசாகப்பட்டினம்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 20 போட்டிகளில் டாஸில் தோற்றது. அதாவது இந்திய அணி கடைசியாக கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக டாஸில் வெற்றி கண்டிருந்தது.
அதன்பிறகு நடைபெற்ற 20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக டாஸை இழந்தது. இந்த தொடர் தோல்விகளுக்கு கே.எல். ராகுல் இந்த போட்டியில் டாஸ் வென்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி டாஸை வென்றுள்ளது.






