ஒருநாள் கிரிக்கெட்: முதல் வீரராக அரிய உலக சாதனை படைத்த தென் ஆப்பிரிக்காவின் பிரீட்ஸ்கே


ஒருநாள் கிரிக்கெட்: முதல் வீரராக அரிய உலக சாதனை படைத்த தென் ஆப்பிரிக்காவின் பிரீட்ஸ்கே
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பிரீட்ஸ்கே இந்த சாதனையை படைத்தார்.

மெக்காய்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் 277 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரீட்ஸ்கே 88 ரன்களும், ஸ்டப்ஸ் 74 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஜம்பா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 37.4 ஓவர்களில் 193 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் இங்கிலிஸ் 87 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 5 விக்கெட்டுகளும், பர்கர் மற்றும் செனுரன் முத்துசாமி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தையும் சேர்த்து இதுவரை 4 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள தென் ஆப்பிரிக்காவின் மேத்யூ பிரீட்ஸ்கே அந்த போட்டிகள் அனைத்திலும் 50+ ரன்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன அவர் தனது முதல் போட்டியில் 150 ரன்கள் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அத்துடன் அடுத்த 3 போட்டிகளிலும் முறையே 83, 57 மற்றும் 88 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் 4 ஒருநாள் போட்டிகளிலும் 50+ ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற அரிய உலக சாதனையை பிரீட்ஸ்கே படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்தியாவின் நவ்ஜோத் சித்து தனது முதல் ஐந்து ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 அரைசதங்கள் அடித்திருந்தார்.

1 More update

Next Story