ரஞ்சி கோப்பை: 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்த போட்டி.. ஆந்திராவுக்கு எதிராக தமிழக அணி தோல்வி

image courtesy:twitter/@TNCACricket
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக அபிஷேக் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார்.
விசாகப்பட்டினம்,
91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) தமிழ்நாடு - ஆந்திரா அணிகள் மோதின. கடந்த 8-ம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் முறையே தமிழ்நாடு 182 ரன்னும், ஆந்திரா 177 ரன்னும் எடுத்தன. பின்னர் 5 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தமிழக அணி 70.3 ஓவர்களில் தமிழக அணி 195 ரன்னில் அடங்கியது. இதனால் ஆந்திர அணிக்கு 201 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக ஆந்த்ரே சித்தார்த் 33 ரன்கள் அடித்தார். ஆந்திரா தரப்பில் சவுரப் குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய ஆந்திர அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ரெட்டி (70 ரன்), 3-வது வரிசையில் களம் கண்ட கரன் ஷிண்டே (51 ரன்) ஆகியோர் அரைசதம் விளாசி வெற்றிக்கு வித்திட்டனர்.
முடிவில் ஆந்திர அணி 41.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 201 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டும், வித்யுத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.






