ரிஷப் பண்ட் ஒற்றை காலில் போராடி ரன் அடித்தார்.. ஆனால் பவுலர்கள்... - நாசர் உசேன் விமர்சனம்


ரிஷப் பண்ட் ஒற்றை காலில் போராடி ரன் அடித்தார்.. ஆனால் பவுலர்கள்... - நாசர் உசேன் விமர்சனம்
x

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பண்ட் 54 ரன்கள் அடித்தார்.

மான்செஸ்டர்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராவ்லி - பென் டக்கட் களமிறங்கினர். இந்திய பந்து வீச்சை சர்வ சாதாரணமாக நொறுக்கிய பென் டக்கட்டும், ஜாக் கிராவ்லியும் துரிதமாக ரன் திரட்டினர். வலுவான அஸ்திவாரம் போட்ட இவர்கள் 166 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர். ஜாக் கிராவ்லி 84 ரன்களில், ஜடேஜாவின் சுழலில் கேட்ச் ஆனார். பென் டக்கட் 94 ரன்களில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அன்ஷூல் கம்போஜியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜூரெலிடம் சிக்கினார்.

2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 46 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. ஆலி போப் (20ரன்), ஜோ ரூட் (11 ரன்) களத்தில் உள்ளனர். 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது காலில் காயமடைந்த ரிஷப் பண்ட் பாதியில் வெளியேறினார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது ரிஷப் பண்ட், வலியையும் பொருட்படுத்தாமல் நொண்டியபடி களத்திற்கு வந்து பேட்டிங் செய்தார். அவரது வருகையை கண்டு உற்சாகமடைந்த இந்திய ரசிகர்கள் கைதட்டி ஆரவாரமான வரவேற்பு அளித்தனர். அப்படி ஒற்றைக்காலில் போராடி அரைசதத்தை கடந்த ரிஷப் பண்ட் 54 ரன்கள் அடித்து அணிக்கு வலுவூட்டினார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் ஒற்றை காலில் போராடி அடித்த ரன்களை இந்திய பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்துக்கு திருப்பி கொடுத்து விட்டதாக அந்நாட்டின் முன்னாள் வீரர் நாசர் உசேன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "மான்செஸ்டரில் நிலைமைகள் சற்று மாறின, ஆனால் அங்கே இந்தியா மிகவும் மோசமாக பவுலிங் செய்தார்கள். வானிலை மாறியதால் உங்களால் பிட்ச்சின் இருபுறமும் பவுலிங் செய்ய முடியவில்லை. ஆனால் நிறைய பந்துகள் காலில் போடப்பட்டன. உண்மையைச் சொன்னால், கேப்டன் எடுத்த முடிவுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. நீங்கள் சிராஜுக்கு பதிலாக ஒரு வாரம் முன்பு வரை அணியிலேயே இல்லாத கம்போஜிடம் புதிய பந்தை கொடுத்தீர்கள். அந்த சூழ்நிலையில் நான் சிராஜை பவுலிங் செய்ய வைத்திருப்பேன்.

மற்றொரு பகுதியில் பும்ராவை பயன்படுத்தியிருப்பேன். பிட்ச்சில் சில பகுதிகளில் பச்சை புற்கள் இருப்பது பற்றி நாம் பேசினோம். அதனை பயன்படுத்தி பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை எடுத்தார். ரிஷப் பண்ட் ஒற்றைக்காலில் களத்திற்கு சென்று இந்தியாவுக்காக மதிப்புள்ள ரன்களை எடுத்தார். ஆனால் பந்துவீச்சாளர்கள் அந்த ரன்களை இங்கிலாந்துக்கு திருப்பி கொடுத்து விட்டார்கள்" என்று கூறினார்.

1 More update

Next Story