விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் ரோகித், கோலி விளையாட வேண்டும் - கவாஸ்கர்

கோப்புப்படம்
ரோகித் சர்மா, விராட் கோலி விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என முன்னாள் கேப்டன் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 19-ந் தேதி பெர்த்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக இருந்து வந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா ஒரு வீரராக அணியில் நீடிக்கிறார். விராட் கோலியும் ஒருநாள் போட்டி அணியில் அங்கம் வகிக்கிறார்.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இது ஜிம்பாப்வே அல்லது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டி என்றால் நிச்சயம் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் விளையாட முன்வந்து இருக்கமாட்டார்கள். ஆனால் இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர். 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இதே ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே இந்த தொடரில் ஆட வேண்டும் என்று அவர்கள் விரும்பியிருக்கலாம்.
விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் 2027-ம் ஆண்டு நடக்கும் ஒரு நாள் உலகக் கோப்பையில் விளையாடுவார்களா? என்று கேட்கிறீர்கள். அது இந்திய அணி அடுத்த 2 ஆண்டுகளில் எத்தனை ஒரு நாள் போட்டிகளில் ஆடப்போகிறது என்பதை பொறுத்தே உள்ளது. ஏனெனில் ஒரு ஆண்டில் வெறும் 7 அல்லது 8 ஒருநாள் போட்டியில் விளையாடிவிட்டு உலகக் கோப்பை போன்ற பெரிய தொடருக்கு தயாராவது எளிதல்ல.
அவர்கள் இருவரும் சர்வதேச ஒருநாள் போட்டி இல்லாத நேரத்தில் இந்தியாவில் நடக்கும் விஜய் ஹசாரே கோப்பையில் (உள்ளூர் 50 ஓவர் போட்டி) விளையாட வேண்டும். இது தான் அவர்கள் சீரான உடல்தகுதியுடன் இருப்பதற்கும், போட்டிக்கான பயிற்சியுடன் இருப்பதற்கும் ஒரே வழி. இவ்வாறு அவர் கூறினார்.






