விராட் கோலியை காப்பி அடிக்க சுப்மன் கில் முயற்சிக்கிறார் - - இந்திய முன்னாள் வீரர் தாக்கு

image courtesy:PTI
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலையில் இருந்திருக்க வேண்டும் என்று மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
மும்பை,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நாளை தொடங்குகிறது.
முன்னதாக லார்ட்சில் நடைபெற்ற 3-வது போட்டியில் இந்திய அணி நெருங்கி வந்து தோல்வியை தழுவியது. அந்த போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி இடையே நடந்த வாக்குவாதம் களத்தில் பரபரப்பை உண்டாக்கியது. அந்த தருணத்தில் சுப்மன் கில் மோசமான வார்த்தையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுப்மன் கில், விராட் கோலியை காப்பியடிக்க முயற்சிப்பதாக இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தாக்கி பேசியுள்ளார். அவரது தேவையற்ற ஆக்ரோஷமே இந்திய அணி தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்க காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "கேப்டன் கில் நடந்து கொள்ளும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. விராட் கடந்த முறை செய்ததைப் போலவே அவர் செயல்பட முயற்சிக்கிறார் என்று நினைக்கிறேன். அது அவரது பேட்டிங்கிற்கு உதவவில்லை. ஐ.பி.எல்.-ல் அவர் கேப்டனாக ஆனதிலிருந்து, அவர் ஆக்ரோஷமான மனநிலைக்கு ஆளாகி, நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதை நான் கவனித்தேன். அது கில் போலவே இல்லை. அவர் அந்த வகையான ஆக்ரோஷத்தைக் காட்டத் தேவையில்லை. அவர் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.
அவர் தனது ஆக்ரோஷமான பாணியையே கடைப்பிடிக்க முடியும். நீங்கள் எப்போதும் அதை வாய்மொழியாகக் கொடுக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலமும் ஆக்ரோஷத்தைக் காட்டலாம். இந்தியா தொடரில் 2-1 என எளிதாக முன்னிலை வகித்திருக்கலாம். இதுபோன்ற ஆக்ரோஷம் ஆட்டத்திற்கு நல்லதல்ல, குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனிடமிருந்து இதுபோன்ற ஆக்ரோஷம் வருவது நல்லதல்ல.
ஸ்டம்ப் மைக் அருகே நின்று அவர் சொன்ன மோசமான வார்த்தைகளில் நான் மகிழ்ச்சியடையவில்லை. நீங்கள் இந்திய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். முந்தைய கேப்டன்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் இதை கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் தொடர்ந்தால் அடுத்த தலைமுறையும் இதையே பின்பற்றுவார்கள்" என்று கூறினார்.






