அதிரடியில் கலக்கிய சூர்யவன்ஷி... இங்கிலாந்து அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா

இந்தியா-இங்கிலாந்து ஜூனியர் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
வொர்செஸ்டர்,
இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி வொர்செஸ்டரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வைபவ் சூர்யவன்ஷி - ஆயுஷ் மாத்ரே களமிறங்கினர். இதில் மாத்ரே 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சூர்யவன்ஷியுடன் விஹான் மல்ஹோத்ரா கை கோர்த்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அணியை முன்னெடுத்து சென்றனர். இதில் மல்ஹோத்ரா நிதானமாக விளையாட சூர்யவன்ஷி அதிரடியில் வெளுத்து வாங்கினார்.
இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்ட அவர் வெறும் 52 பந்துகளில் சதம் விளாசினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த மல்ஹோத்ரா அரைசதம் கடந்தார். அதிரடியில் கலக்கிய சூர்யவன்ஷி வெறும் 78 பந்துகளில் 143 ரன்கள் (10 சிக்சர்கள், 13 பவுண்டரிகள்) அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தாலும் மல்ஹோத்ரா சிறப்பாக விளையாடி இந்திய அணி 350 ரன்களை கடக்க உதவினார். சிறப்பாக விளையாடிய மல்ஹோத்ரா 129 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 363 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் ஜேக் ஹொம் 4 விக்கெட்டுகளும், செபாஸ்டியன் மோர்கன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 364 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து களமிறங்க உள்ளது.