3வது டி20: வெஸ்ட் இண்டீஸ்க்கு 190 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

Image Courtesy: X (Twitter) / File Image
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 74 ரன் எடுத்தார்.
கயானா,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மான்க்கும் 3வது போட்டி இன்று நடந்து வருகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து பாகிஸ்தானின் தொடக்க வீரர்களாக சாஹிப்சாதா பர்ஹான் மற்றும் சைம் அயூப் களம் புகுந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இந்த இணையை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறினர்.
நிலைத்து நின்று ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் சாஹிப்சாதா பர்ஹான் 74 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹசன் நவாஸ் 15 ரன், முகமது ஹாரிஸ் 2 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து குஷ்தில் ஷா களம் புகுந்தார்.
மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சைம் அயூப் 66 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 74 ரன் எடுத்தார். தொடர்ந்து 190 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஆட உள்ளது.






