இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தொடர் ஆரம்பிப்பதற்குள் காயத்தில் சிக்கிய இந்திய முன்னணி வீரர்..?

image courtesy:PTI
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட உள்ளார்.
லார்ட்ஸ்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ரிஷப் பண்டும் செயல்பட உள்ளனர்.
இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி கடந்த 6-ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. தற்போது அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் பயிற்சியின்போது முன்னணி வீரரான ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று பேட்டிங் பயிற்சி மேற்கொள்ளும்போது இடது கையில் பந்து தாக்கியதில் காயமடைந்த அவர், வலியால் துடித்துள்ளார்.
உடனடியாக அணியின் மருத்துவர்கள் ஐஸ் ஒத்தடம் கொடுத்துள்ளனர். அதன்பின் அவர் நேற்றைய பயிற்சியில் ஈடுபடவில்லை. இருப்பினும் காயத்தின் தன்மை பெரிதாக இல்லை என கூறப்படுகிறது. அணியின் மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருவதாகவும், முதல் டெஸ்ட் போட்டிக்கு இன்னும் 10 நாட்கள் இருப்பதால் அவர் அதற்கு முன் முழு உடற்தகுதியை எட்டி விடுவார் என்றும் கூறப்படுகிறது.
இப்படி தொடர் ஆரம்பிப்பதற்குள் முன்னணி வீரர் காயத்தை சந்தித்திருப்பது அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.






