டெஸ்ட் கிரிக்கெட்: ஜாம்பவான்கள் டிராவிட், சேவாக்கின் மாபெரும் சாதனையை சமன் செய்த ஜெய்ஸ்வால்

image courtesy:PTI
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 28 ரன்கள் அடித்தார்.
பர்மிங்காம்,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் (269 ரன்) அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 89.3 ஓவர்களில் 407 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் 184 ரன்களுடன் இருந்தார். ஹாரி புரூக் 158 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்து மொத்தம் 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜெய்ஸ்வால் 28 ரன்னில் எல்பிடபிள்யூ ஆனார். லோகேஷ் ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்த இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 9 ரன்கள் அடித்திருந்தபோது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த மைல்கல்லை வெறும் 40 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை எட்டிய இந்திய வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜாம்பவான்கள் வீரேந்திர சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரை சமன் செய்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. டிராவிட்/சேவாக்/ஜெய்ஸ்வால் - 40 இன்னிங்ஸ்கள்
2. விஜய் ஹசாரே/கம்பீர் - 43 இன்னிங்ஸ்கள்
3. சுனில் கவாஸ்கர்/சச்சின் - 44 இன்னிங்ஸ்கள்
4. கங்குலி - 45 இன்னிங்ஸ்கள்
5. புஜாரா - 46 இன்னிங்ஸ்கள்