நாங்கள் செயல்பட்ட விதம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது - ஹர்மன்பிரீத் கவுர்

Image Courtesy: @BCCIWomen
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
சவுத்தம்டான்,
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை (3-2 ) முதல்முறையாக வென்று வரலாறு படைத்த இந்திய அணி அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது.
இதன்படி இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சவுத்தம்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்தது.
பின்னர் 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 262 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தீப்தி ஷர்மா 62 ரன்களுடனும், அமன்ஜோத் கவுர் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் சார்லி டீன் 2 விக்கெட்டும், லாரன் பெல், சோபி எக்லெஸ்டோன், லாரன் பைலர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தீப்தி ஷர்மா ஆட்டநாயகி விருது பெற்றார்.
இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அளித்த பேட்டியில் கூறியதாவது, பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் நாங்கள் செயல்பட்ட விதம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தீப்தி ஷர்மாவின் இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானதாகும். எல்லா பாராட்டுகளும் அவரையே சாரும். நாங்கள் 20-30 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்ததாக நினைத்தோம்.
ஆனால் இது பேட்டிங்குக்கு அருமையான ஆடுகளம் என்பதை அறிவோம். பீல்டிங்கில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இன்று 2 கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டோம். அடுத்த ஆட்டத்தில் பீல்டிங்கில் கச்சிதமாக செயல்பட முயற்சிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.






