இது ஒன்றும் இந்தியா அல்ல துபாய் - விமர்சனங்களுக்கு இந்திய கேப்டன் பதிலடி

image courtesy:twitter/@BCCI
சாம்பியன்ஸ் டிராபியில் ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்திய அணிக்கு சாதகம் என்று விமர்சனங்கள் எழுந்தன.
துபாய்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடந்து வருகிறது. மற்ற லீக் ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடைபெற்றது.
8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, 'பி' பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறின.
இந்த நிலையில் துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
முன்னதாக இந்திய அணி அங்கும் இங்கும் அலையாமல் ஒரே இடத்தில் தங்கியிருந்து ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு உள்ளூர் போன்று கூடுதல் சாதகமாக இருக்கிறது என சில முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் விமர்சித்தனர்.
இந்நிலையில் துபாய் ஒன்றும் தங்களது சொந்த ஊர் கிடையாது என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அரைஇறுதியில் பிட்ச் எப்படி இருக்கும் என்பது எங்களுக்கே தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "எங்களுக்கு எந்த சாதகமும் இல்லை. நாங்கள் விளையாடிய 3 போட்டிகளிலும் மேற்பரப்பு ஒரே மாதிரியாக இருந்தது. ஆனால் 3 போட்டிகளிலுமே பிட்ச் வெவ்வேறு மாதிரியாக நடந்து கொண்டது. அரைஇறுதியில் அது எவ்வாறு இருக்கும் என்பது எங்களுக்கே தெரியாது. ஆனால் எது நடந்தாலும் நாங்கள் எங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் உட்படுத்திக் கொண்டு விளையாட வேண்டும்.
துபாய் எங்களுடைய சொந்த ஊர் கிடையாது. நாங்கள் இங்கே அதிக போட்டிகளிலும் விளையாடியதில்லை. எங்களுக்கும் இது புதிய மைதானமே. நியூசிலாந்துக்கு எதிராக பந்து ஸ்விங், வேகத்துக்கும் கொஞ்சம் சாதகமாக இருந்தது. அதை முதல் 2 போட்டிகளில் பார்க்க முடியவில்லை. இங்கே 3 போட்டிகளில் விளையாடியுள்ளோம். ஆனால் இங்கே 4 - 5 பிட்ச்கள் இருக்கிறது. அதில் ஒவ்வொன்றும் வித்தியாசமான இயற்கையை கொண்டிருக்கும். அது எப்படி விளையாடும் என்பது எங்களுக்குத் தெரியாது.
பிட்ச்கள் பார்க்க ஒன்றாக தெரிந்தாலும் விளையாடும்போது வித்தியாசமாக இருக்கும். எனவே நியூசிலாந்துக்கு எதிராக விளையாடியதை போலவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் விளையாடலாம் என்று செல்ல முடியாது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பந்து கொஞ்சம் அதிகமாக சுழன்றது. அதை முதல் 2 போட்டிகளில் அதிகம் பார்க்க முடியவில்லை. எனவே அடுத்தப் போட்டியில் அது எப்படி இருக்கும் என்பது எங்களுக்கும் கேள்விக்குறியாகும்" என கூறினார்.






