ரோகித்தின் இலக்கு இதுதான்.. அவரது சிறுவயது பயிற்சியாளர் தகவல்

image courtesy:PTI
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மும்பை,
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்தது. இதில் நடைபெற்ற முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 237 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி ரோகித் சர்மாவின் அபார சதத்தின் (121 ரன்கள்) உதவியுடன் வெறும் 38.3 ஓவர்களில் வெற்றி பெற்றது.
முந்தைய ஆட்டத்தில் (2-வது போட்டி) அரைசதமும் இந்த ஆட்டத்தில் சதமும் அடித்த ரோகித் சர்மா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தனதக்கினார்.
முன்னதாக 2024 டி20 உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையில் இந்தியா வென்று சாதனை படைத்தது. அதனால் 2027 உலகக் கோப்பையில் அவருடைய தலைமையில் இந்தியா விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்போது 40 வயதில் அவரால் அசத்த முடியாது என்று கருதும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் தொடங்கியுள்ளது. இதனை நினைத்தெல்லாம் கவலைப்படாத ரோகித் இந்த தொடரில் 202 ரன்கள் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் 2027 உலகக்கோப்பையில் விளையாடும் வரை ரோகித் ஓய்வு பெற மாட்டார் என்று அவருடைய சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “இது ஒரு சிறப்பு வாய்ந்த தருணம். அவர் (ரோகித்) சிறப்பாக செயல்படவில்லை என்றும், கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்றும் பேச்சுக்கள் வந்தன. ஆனால் கடந்த இரண்டு போட்டிகளில் இரண்டு நல்ல இன்னிங்ஸ்களை விளையாடினார், முதலில் 75 (73 பந்துகள்) மற்றும் இப்போது 120 (121* ரன்கள்). இதன் மூலம் அவர் இன்னும் நாட்டிற்கு பங்களிக்கும் ஒரு சிறந்த வீரர் என்பதைக் காட்டியுள்ளார். ஒரே ரகசியம் அவரது தன்னம்பிக்கை. அதனால்தான் அவர் ஓய்வு பெறவில்லை. அவர் 2027 உலகக்கோப்பையில் விளையாட விரும்புகிறார், அதன் பிறகுதான் ஓய்வு பெறுவார், அதற்காக அவர் தயாராகி வருகிறார்” என்று கூறினார்.






