ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது போட்டியிலும் விராட் கோலி டக் அவுட்: ரசிகர்கள் ஏமாற்றம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி டக் அவுட் ஆன நிலையில் இன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்தது.
இதையடுத்து 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் கடந்த 17 ஆண்டுகளாக இந்திய அணி தோல்வியே கண்டதில்லை. கடைசியாக 2008-ல் தோற்றிருந்த நிலையில், இந்தியா இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, முதல் போட்டியின் தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் விராட் கோலி அடிலெய்டு மைதானத்தில் இதுவரை 5 சதங்களுடன் 975 ரன்கள் குவித்திருப்பதால், கடந்த போட்டியில் டக் அவுட் ஆனதற்கு பதிலடியாக பெரிய அளவில் ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய போட்டியிலும் விராட் கோலி 4 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி வெளியேறினார்.
முதல் போட்டியில் டக் அவுட் ஆன நிலையில், இரண்டாவது போட்டியிலும் டக் அவுட் ஆகி இருப்பது கோலியின் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. கோலியின் கிரிக்கெட் கரியரில் ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆவது இதுவே முதல்முறையாகும். அடிலெய்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 16 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.






