விராட், ரோகித் 2027 ஒருநாள் உலகக்கோப்பையில்... - இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பேட்டி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி 30-ம் தேதி நடைபெற உள்ளது.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

ராஞ்சி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.

இதனையடுத்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற 30-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. கே.எல். ராகுல் தலைமையிலான அந்த அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்த ஒருநாள் போட்டிகளில் முன்னணி நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளது அணிக்கு கூடுதல் வலுவாக அமைந்துள்ளது.

முன்னதாக விராட் மற்றும் ரோகித் இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில் 2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டி வரை தொடர்ந்து விளையாட முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடும் அவர்களால் உடல் தகுதியை தக்கவைத்து அதுவரை சிறப்பாக செயல்பட முடியுமா? என்ற கேள்விக்குறி பலமாக நிலவுகிறது.

மேலும் அந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அவர்களை கழற்றி விட இந்திய தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய விமர்சனங்களுக்கு அவர்கள் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக ஆடி பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தொடர்ந்து பிட்டாக இருக்கும் பட்சத்தில் 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடலாம் என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- நிச்சயமாக, அவர்கள் தரமான வீரர்கள். அவர்கள் தொடர்ந்து கடினமாக உழைக்கவும் பிட்டாக இருக்கவும் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர். நான் எப்போதும் அனுபவத்தை நம்புகின்றவன். நீங்கள் அதை எங்கேயும் கண்டறிய முடியாது.

அவர்கள் கோப்பைகளை வென்றிருக்கிறார்கள். பெரிய போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். உலகக்கோப்பைக்கு இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது. எனவே தங்களுடைய பிட்னசை நிர்வாகிக்கும் வரை தங்களுடைய உடல் நன்றாக ஒத்துழைக்கிறது என்ற கருதும் வரை உலகக்கோப்பை பயணத்தில் அவர்கள் இருப்பார்கள்.

கடந்த இரண்டு வாரங்கள் ஏமாற்றமளித்தது (டெஸ்ட் தொடர் குறித்து). முக்கியமான விஷயம் என்னவென்றால் நமது முழு சக்தியையும் வெள்ளை பந்து (ஒருநாள் மற்றும் டி20) அணியை நோக்கி வைத்திருப்பது அவசியம். நாங்கள் நல்ல வெள்ளை பந்து கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். விராட் மற்றும் ரோகித் திரும்பி வருவதால் அணியில் ஒரு புதிய ஆற்றல் உருவாகி உள்ளது என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com