சில போட்டிகளில் வெல்வோம்.. சிலவற்றில் தோற்போம்.. ஆனால் ஒருபோதும்... - வைரலாகும் கம்பீரின் பதிவு


சில போட்டிகளில் வெல்வோம்.. சிலவற்றில் தோற்போம்.. ஆனால் ஒருபோதும்... - வைரலாகும் கம்பீரின் பதிவு
x

image courtesy:AFP

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா சமன் செய்தது.

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதன் முதல் 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக் (111ரன்கள்), ஜோ ரூட் (105 ரன்கள்) சதமடித்தனர். இந்தியா தரப்பில் சிராஜ் 5 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.

முன்னதாக இந்த தொடரில் இந்திய அணி படுதோல்வி அடையும் என்று பல முன்னாள் வீரர்கள் கூறினர். ஆனால் அவர்களின் கணிப்பை எல்லாம் பொய்யாக்கிய சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தொடரை சமன் செய்து அசத்தியது. அத்துடன் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீரும் தன் மீதான விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த தொடர் நிறைவடைந்ததையொட்டி கவுதம் கம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

கம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில், "சில போட்டிகளி வெல்வோம், சிலவற்றில் தோற்போம்.... ஆனால் ஒருபோதும் நாங்கள் சரணடைய மாட்டோம்! சபாஷ் பாய்ஸ்!" என்று பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

1 More update

Next Story