தென்ஆப்பிரிக்கா அணிக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து - இன்று மீண்டும் மோதல்


தென்ஆப்பிரிக்கா அணிக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து - இன்று மீண்டும் மோதல்
x

லீட்சில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாடியது.

லண்டன்,

பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. லீட்சில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாடியது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று நடக்கிறது. ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து முதல் ஆட்டத்தில் 131 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இது தங்களுக்கு மோசமான நாளாக அமைந்து விட்டது என கூறிய ஹாரி புரூக் 2-வது ஆட்டத்தில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் வியூகங்களை தீட்டுகிறார். புதுமுக வேகப்பந்து வீச்சாளர் சோனி பாகெர் 7 ஓவர்களில் 76 ரன்களை வாரி வழங்கினார். இங்கிலாந்து அறிமுக பவுலரின் மோசமான பந்து வீச்சு இது தான். ஆனாலும் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

தென்ஆப்பிரிக்க அணி தொடக்க ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உற்சாகத்துடன் களம் காணுகிறது. இதிலும் வெற்றி பெற்றால் இங்கிலாந்து மண்ணில் 27 ஆண்டுக்கு பிறகு ஒரு நாள் தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும். மார்க்ரம், ரிக்கெல்டன், பவுமா, டிவால்ட் பிரேவிஸ், வியான் முல்டர், கேஷவ் மகராஜ் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

1 More update

Next Story