மகளிர் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான்

Image Courtesy: @ICC
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றி விட்டது.
லாகூர்,
தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 25.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 115 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக லாரா வால்வார்ட் 28 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் நஷ்ரா சந்து 6 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 116 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பாகிஸ்தான் அணி 31 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 117 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சித்ரா அமீன் 50 ரன் எடுத்தார். இந்த போட்டியில் தோல்வி கண்டாலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றி விட்டது.






