மகளிர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா

Image Courtesy: @ICC
தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது
லாகூர்,
தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 46 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 292 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக முதல் இன்னிங்ஸ் அத்துடன் முடிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டாஸ்மின் பிரிட்ஸ் 171 ரன்னும், லாரா வால்வார்ட் 100 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் அணி டிஎல்எஸ் முறைப்படி 46 ஓவரில் 313 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து தனது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 287 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 25 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சித்ரா அமீன் 122 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றிவிட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 22ம் தேதி நடக்கிறது.






