மகளிர் உலகக்கோப்பை: இந்திய வீராங்கனையின் சாதனையை தட்டிப்பறித்த மரிஜானே காப்

image courtesy:ICC
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் காப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கவுகாத்தி,
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடந்த முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் நாட் சிவெர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் லாரா வோல்வார்ட் 169 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் 4 விக்கெட் கைப்பற்றினர்.
பின்னர் கடின இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 42.3 ஓவர்களில் 194 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலகக் கோப்பையில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வரலாறு படைத்தது.
இங்கிலாந்து தரப்பில் கேப்டன் நாட் சிவெர் (64 ரன்), அலிஸ் கேப்சி (50 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். தென்ஆப்பிரிக்க தரப்பில் மரிஜானே காப் 7 ஓவர்களில் 3 மெய்டனுடன் 20 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 5 விக்கெட்டுக்ளையும் சேர்த்து மரிஜானே காப் இதுவரை மகளிர் உலகக் கோப்பையில் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்தது. இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமியிடம் (43 விக்கெட்) இருந்து தட்டிப்பறித்தார்.






