ஜூனியர் ஆசிய கோப்பை கால்பந்து: 20 ஆண்டுகளுக்குப்பின் இந்திய மகளிர் அணி தகுதி பெற்று அசத்தல்


ஜூனியர் ஆசிய கோப்பை கால்பந்து: 20 ஆண்டுகளுக்குப்பின் இந்திய மகளிர் அணி தகுதி பெற்று அசத்தல்
x

image courtesy:twitter/@IndianFootball

இந்திய அணி தனது கடைசி தகுதி சுற்று ஆட்டத்தில் மியான்மருடன் இன்று மோதியது.

யாங்கோன்

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் (20 வயதுக்குட்பட்டோர்) கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று மியான்மரில் நடக்கிறது. இதில் இந்திய மகளிர் அணி 'டி' பிரிவில், மியான்மர், இந்தோனேஷியா, துர்க்மெனிஸ்தானுடன் இடம் பெற்றிருந்தது.

இதில், இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இந்தோனேஷியாவுக்கு எதிராக சமனும் (0-0), 2-வது போட்டியில் துர்க்மெனிஸ்தானுக்கு எதிராக அபார வெற்றியும் (7-0) பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.

இந்த சூழலில் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் மியான்மருடன் இன்று விளையாடியது. இதில் வெற்றி பெற்றால் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் விளையாடிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் கோல் அடித்தது.

அதன்பின் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் மியான்மரை வீழ்த்தி ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்று அசத்தியது. இந்தியா தரப்பில் பூஜா வெற்றிக்குரிய அந்த கோலை அடித்தார்.

இந்திய அணி கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு ஜூனியர் (19 வயதுக்குட்பட்டோர்) ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாடி இருந்தது. அதன் பிறகு 20 வருடங்கள் கழித்து தற்போதுதான் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story