மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி: சூப்பர்4 சுற்றில் இந்தியா - ஜப்பான் ஆட்டம் டிரா


மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி: சூப்பர்4 சுற்றில் இந்தியா - ஜப்பான் ஆட்டம் டிரா
x

image courtesy:twitter/@TheHockeyIndia

இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது சீனா - தென் கொரியா ஆட்டத்தின் முடிவை பொறுத்து அமையும்.

ஹாங்சோவ்,

11-வது மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதன் லீக் சுற்று முடிவில் சூப்பர்4 சீனா, தென் கொரியா, இந்தியா, ஜப்பான் அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் தகுதி பெற்றன. சூப்பர்4 சுற்றில் இவை தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

லீக் சுற்றில் 2 வெற்றி (தாய்லாந்து, சிங்கப்பூருக்கு எதிராக) ஒரு டிரா (ஜப்பானுக்கு எதிராக 2-2) என்று தோல்வியை சந்திக்காத சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி சூப்பர்4 சுற்றில் முதலாவது ஆட்டத்தில் தென் கொரியாவை (2-0) பதம் பார்த்தது. முந்தைய ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோற்றது.

மறுபுறம் ஜப்பான் அணியை பொறுத்தமட்டில் சூப்பர்4 சுற்றில் 0-2 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் பணிந்தது. அடுத்த ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவிடம் டிரா கண்டது.

இந்நிலையில் சூப்பர்4 சுற்றின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் இன்று நடக்கின்றன. இதில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஜப்பானை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்தியா தரப்பில் பியூட்டி டங்டங்கும், ஜப்பான் தரப்பில் ஷிஹோ கோபயாகவாவும் கோல் அடித்தனர்.

இறுதிப்போட்டிக்குள் நுழைய இந்த ஆட்டத்தில் வெற்றி அல்லது டிரா செய்ய வேண்டும் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி டிரா செய்ததன் மூலம் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் உள்ளது. இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் சீனா அணி தென் கொரியாவுக்கு எதிராக வெற்றி அல்லது டிரா கண்டால் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மாறாக சீனா தோல்வியடைந்தால் இந்திய அணி வெளியேறும்.

மறுபுறம் நடப்பு சாம்பியன் ஜப்பான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

1 More update

Next Story