ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: லக்சயா சென், பிரனாய் முதல் சுற்றில் வெற்றி

கோப்புப்படம்
ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் லக்சயா சென், பிரனாய் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
குமாமோட்டோ,
ஜப்பான் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள குமாமோட்டோவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் லக்சயா சென், கோகி வடனாபேவ் (ஜப்பான்) உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 21-12, 21-16 என்ற நேர்செட்டில் கோகி வடனாபேவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் சரிவில் இருந்து மீண்டு 16-21, 21-13, 23-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லியோங் ஜூன் ஹாவை வீழ்த்தினார். மற்ற இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். கிரண் ஜார்ஜ் 20-22, 10-21 என்ற நேர்செட்டில் மலேசியாவின் ஜிங் ஹாங் கோக்கிடம் பணிந்தார். ஆயுஷ் ஷெட்டி 16-21, 11-21 என்ற நேர்செட்டில் கோடை நரோகாவிடம் (ஜப்பான்) தோற்று நடையை கட்டினார். தருண் மன்னே பள்ளியும் முதல் தடையை தாண்டவில்லை.






